Enable Javscript for better performance
எல்லாபுரம் ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம்: ரூ.66 லட்சத்தில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    எல்லாபுரம் ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம்: ரூ.66 லட்சத்தில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 17th April 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ரூ.66 லட்சம் மதிப்பில் 49 பணிகளை மேற்கொள்ள எல்லாபுரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    எல்லாபுரம் ஒன்றியக் குழு கூட்டம் பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் அம்மினி மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.பாபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சந்திரன், ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், பெரியபாளையம் தர்மராஜா கோயில் தெருவில் புதிய தண்ணீர்த் தொட்டி, பஜார் தெருவில் ஆழ்துளைக் கிணற்றுக்கு பைப்லைன் அமைப்பது, கன்னிகைப்பேரில் 8, 9-ஆவது வார்டு, பெரியகாலனி ஆகியவற்றில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பது, மின் மோட்டர், பைப்லைன் அமைப்பது, மஞ்சங்காரணி ஊராட்சியில் பைப்லைன் அமைப்பது, செங்கரை, செம்பேடு ஊராட்சியில் பைப்லைன் அமைப்பது உள்ளிட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 49 குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை ரூ.66 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

    திமுக உறுப்பினர் முரளி: எல்லாபுரம் ஒன்றியத்தில் கொசு ஒழிப்புப் பணிக்காக 40 பணியாளர்களை நியமித்தது குறித்து ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஒன்றிய பொது நிதியில் இருந்து சம்பளம் பெறும் அவர்கள் பணியை ஒழுங்காகச் செய்தார்களா எனத் தெரியவில்லை.

    ஆணையர்: பணிகளை சுகாதாரத் துறையினர் முறையாகக் கண்காணித்து அதற்குரிய அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர்.

    மார்க்சிஸ்ட் உறுப்பினர் சம்பத்: எல்லாபுரம் ஒன்றியத்தில் 40 சதவீத மக்கள் ஆதார் அட்டை பெறாத நிலையில், வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டையைச் சேர்க்கும் திட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.

    எனவே, ஆதார் அட்டைக்காக சிறப்பு முகாம்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறாக விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் பேசிய ஆணையர், 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் நடப்பதாகத் தெரிய வந்தால், அந்தந்தப் பகுதி உறுப்பினர்கள் 1098 என்ற எண்ணிலோ அல்லது அப்பகுதி காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில், உறுப்பினர்கள் வெங்கல் நாகராஜ், பெரியபாளையம் சுரேஷ், அண்ணாமலை, பாகல்மேடு முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai