Enable Javscript for better performance
தனிநபர் கழிப்பறை: ஊக்குவிக்க அரசு மான்யம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு மானியம், கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2015-16-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் பேசிய தமிழக முதல்வர், 15 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்படும் என அறிவித்தார்.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா (ஊரகம்) திட்டத்தின் கீழ், 48,163 கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 23,732 கழிப்பறைகளும் 2015-16-ஆம் ஆண்டில் கட்டப்படும்.

    ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கும் தகுதி வாய்ந்த பயனாளிக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படும்.

    ஊரகப் பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையை உருவாக்குவது, கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து உபயோகப்படுத்துவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு ஆகியவற்றை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்காணும் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறைக்கும் ரூ.300 ஊக்கத் தொகையாக இந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

    தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாகக் கிடைக்கும்.

    இத்திட்டம் கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும். ஊராட்சித் தலைவரின் வேலை உத்தரவு பெற்றவுடன், மூன்று மாதங்களுக்குள் தனிநபர் இல்ல கழிப்பறையைக் கட்டி முடிக்க வேண்டும்.

    இப்போது ரூ.12,000 மதிப்பீட்டில் கட்டப்படும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கான மானியத் தொகை இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும். அடித்தளம் முடிந்த பிறகு முதல் தவணையும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இரண்டாவது தவணையும் விடுவிக்கப்படும். இத்திட்டத்தை தனிநபர் இல்லக் கழிப்பறை இல்லாதோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai