Enable Javscript for better performance
நெல்களமான நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர், ஜன. 26: திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையை விவசாயிகள் நெல்களமாகப் பயன்படுத்துவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் வரை 32 கி.மீ. நீள நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலையில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்ல முடியும். அதே நேரத்தில் செங்குன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆந்திர மாநிலங்களுக்கும் செல்ல முடியும்.

    செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளியூர் கூட்டுச் சாலையில் இருந்து வெங்கல், பெரியபாளையம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியும்.

    மேலும் செங்குன்றம் வரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

    இதனால் அந்தச் சாலையில் எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் விவசாயிகள் ஒதிக்காடு, விளாப்பாக்கம், கீழானூர், மேலானூர் உள்ளிட்டப் பகுதிகளில் தங்கள் விளைவிக்கும் நெல்லை சாலையில் போட்டு காய வைப்பது, உம்மியைப் பிரித்தெடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு சாலையை நெற்களமாக மாற்றி வருகின்றனர். இதனால் அந்தச் சாலையில் செல்லும் பல வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும், கண்களில் தூசி விழுந்து அவதிப்படுவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் போக்குவரத்து போலீஸாரும் அவ்வப்போது அந்தப் பகுதிகளில் ரோந்துச் சென்று  சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai