தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில், 68 துப்பாக்கிகள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இம்மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வேட்டை பணியில் ஈடுபடுவோர் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்தில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவு அறிவித்த பின்னர் தங்களது துப்பாக்கிகளை, அந்த ரசீதைக் காட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி இதுவரை இம்மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 68 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.