திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்லிடப்பேசியில் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி, அனைத்து அனுமதிக்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து அவ்வழியாகவே அனுமதியைப் பெறவும் வழி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்செவி அஞ்சல் வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி எண். 82206 00569-இல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.