Enable Javscript for better performance
தினமணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தினமணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

    By  கும்மிடிப்பூண்டி,  |   Published on : 15th April 2016 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி நாளிதழும், காந்தி உலக மையத்தின் வீ சேஞ்ச் அமைப்பும் இணைந்து 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கும்மிடிப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் பெறக்கூடாது, நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் தர முன் வருபவரை நம்ப மாட்டோம் என்பதை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு நடத்தப்பட்ட இந்த கையெழுத்து இயக்கத்துக்கு காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஷேர் பெண்கள் அறக்கட்டளை தலைவர் மேரி ஆக்சீலியா, பாரதிதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரவி, கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் கேசவன், காந்தி உலக மைய நிர்வாகிகள் சுவாமிநாதன், பிரதாப், பிரேம்குமார், கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியர் வனமாலிதரன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை முன்னின்று நடத்தினார்.
     தொடர்ந்து இந்த கையெழுத்து இயக்கத்தில் காந்தி உலக மையத்தைச் சேர்ந்த 50 தன்னார்வலர்கள், முதல் வாக்காளர்கள் 75 பேர், முதியோர், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் கையொப்பத்தை பதாகையில் இட்டனர். மேலும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஜெகன்நாதன் என்ற மாற்றுத் திறனாளி தானாக முன்வந்து கையெழுத்திட்டதும், கையெழுத்திட தெரியாதவர்கள் கைநாட்டு வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
     நிகழ்ச்சியின்போது கையெழுத்திட வந்தவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக இந்த கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்து காந்தி உலகமைய தன்னார்வலர்களால் விளக்கிக் கூறப்பட்டது.
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், நிர்வாகிகள், தினமணி வாசகர்கள் முன்னின்று நடத்தினர்.
    இன்று ஊத்துக்கோட்டையில்...
     ஊத்துக்கோட்டை, ஏப். 14: சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தினமணி நாளிதழும், ஊத்துக்கோட்டையில் உள்ள விவேகானந்தா கல்விக் குழுமமும் இணைந்து நடத்தும் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி, கையெழுத்து இயக்கம் ஊத்துக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
     பேரணி விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் இருந்து நகரின் முக்கிய சாலைகளான திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, நேரு பஜார் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது. இப்பேரணியை ஊத்துக்கோட்டை வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வி.விஜயலட்சுமி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இதில் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ரங்கநாதன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai