Enable Javscript for better performance
மாங்காடு அருகே தம்பதி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மாங்காடு அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாங்காட்டை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (30). இவரது மனைவி வேளாங்கண்ணி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களாகிறது. குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால் வேளாங்கண்ணி மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

    இந்நிலையில் புதன்கிழமை காலை முத்து வேலைக்குச் சென்று விட்டார். வழக்கமாக  அருகில் இருப்பவர்களிடம் பேசிவரும் வேளாங்கண்ணி புதன்கிழமை மாலை வரை வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் அருகில் வசிப்பவர்கள் முத்து வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு வேளாங்கண்ணி தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார் வேளாங்கண்ணியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் வேளாங்கண்ணி இறந்தது குறித்து அவரது கணவர் முத்துவிடம் தெரிவித்தும் அவர் காலை வரை வீட்டுக்கு வரவில்லை. போலீஸார் முத்துவின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது அது அணைப்பில் இருந்துள்ளது.

    இந்நிலையில் வியாழக்கிழமை காலை முத்து வீட்டின் அருகே உள்ள குடிசையில் முத்து தூக்கிட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து மாங்காடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்றனர். அங்கு முத்துவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வேளாங்கண்ணி தற்கொலை செய்து கொண்டதும், இதை அறிந்த முத்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai