Enable Javscript for better performance
தொழிற்சாலை கழிவு நீரை குடித்ததால் ஆடு சாவு?- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பாப்பன்குப்பம் பகுதியிலுள்ள தனியார் மருந்து தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரைக் குடித்த ஆடு உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
    பாப்பன்குப்பம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி ராணி (45), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு வழங்கிய 4 ஆடுகளைப் பெற்று வளர்த்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை ராணி வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் வழியே வெளியேறிய கழிவு நீரைக் குடித்ததாக கூறப்படுகிறது.
    தொடர்ந்து, அந்த ஆட்டுக்கு வலிப்பு ஏற்பட்டது. அந்த ஆட்டை மருத்துவமனைக்கு ராணி கொண்டு சென்றார். எனினும், ஆடு உயிரிழந்தது.
    இதனைத் தொடர்ந்து ராணி, அவரது குடும்பத்தார் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் உயிரிழந்த ஆட்டை தொழிற்சாலையின் முன் கிடத்தி நியாயம் கேட்டனர்.
    தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் திட்ட மேலாளர் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகத்திடமும், பொதுமக்களிடமும் சமாதானம் பேசினர்.
    இதில் சமாதானம் அடையாத ராணி, தொழிற்சாலை கழிவு நீரை குடித்ததால் தான் ஆடு உயிரிழந்ததாகக் கூறி கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai