Enable Javscript for better performance
ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை: பொதுமக்கள் சாலை மறியல், போலீஸ் குவிப்பு- Dinamani

சுடச்சுட

  

  ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை: பொதுமக்கள் சாலை மறியல், போலீஸ் குவிப்பு

  By DIN  |   Published on : 15th October 2016 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rmari

  தங்கராஜை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். (உள்படம்) கொலை செய்யப்பட்ட தங்கராஜ்.

  திருவள்ளூர் அருகே நடைபயிற்சிக்குச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
  இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாலும், பதற்றம் நீடிப்பதாலும் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
  பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்மணம்பேடு ஊராட்சி மன்றத்தின் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தவர் தங்கராஜ் (49). இவரது மனைவி நிறைமதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
  இம்முறை இந்த ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நிறைமதி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
  இந்நிலையில், தங்கராஜ் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி வழக்கம்போல நடைபயிற்சிக்கு சென்றார்.
  அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்கராஜை வழிமறித்து, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க தங்கராஜ் தெருத்தெருவாக ஓடியும், அவரை விடாமல் துரத்தி வெட்டினர். அவர் கீழே சரிந்து விழுந்ததும், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
  இதுகுறித்த தகவல் அறிந்ததும், வெள்ளவேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  இதனிடையே, கொலை குறித்த தகவல் வேகமாக பரவியதால் மேல்மணம்பேடு பகுதி மக்கள் வெள்ளவேடு காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி காவல் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பொதுமக்களை சமாதானம் செய்து கலைய வைத்தனர்.
  போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இதே கிராமத்தில் மனோகரன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கராஜ் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
  இதனால், முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம், அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அவரது மனைவி போட்டியிட்டு வெற்றி பெறுவது பிடிக்காமல் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  கொலை நடந்த மேல்மணம்பேடு பகுதியில், மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
  கொலை குறித்து, தங்கராஜின் மைத்துனர் நித்தியானந்தம் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  3 தனிப்படை அமைப்பு: இதனிடையே, இந்த கொலை தொடர்பாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் சாம்சன் கூறியதாவது:
  குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில், மணவாள நகர், செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர்களைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். அதன் பின்னரே, கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai