

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (புறநகர்) மாவட்டங்களில் உள்ள 615 கிராமங்களில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம், ஓராசிரியர் பள்ளிகள் மூலம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் இயங்கி வருகிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் வேதாந்தம் ஜி இச்சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (புறநகர்) மாவட்டங்களில் 110 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில், 110 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓராசிரியர்கள் மூலம் இலவச கல்வி சேவை வழங்கப்பட்டது.
வேதாந்தம் ஜியுடன் இந்த அமைப்பின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கௌரவ செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் ஓராசிரியர் பள்ளிகளை நிர்வகத்து வருகின்றனர்.
தற்போது 615 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி மூலம் இலவச கல்வி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 வயது முதல் 12 வயது வரையுள்ள 22,450 ஏழை மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஓராசிரியர் பள்ளிகளில் அந்தந்த கிராமப்புறங்களில் நலிவடைந்த படித்த பெண்களை ஆசிரியர்களாக தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
சமூக நலப் பணிகள்: கிராமங்களில் சுகாதாரத்தை பேணும் வகையில் 'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் இதுவரை 182 குளியலறையுடன் சேர்ந்த கழிப்பறை கட்டி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இச்சங்கம் சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல், உடல்நலம், நல்வாழ்வு மேம்பாடு, இயற்கை பேரிடர் சமயத்தில் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களுக்கு திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் கல்வி சேவை போக, மீதமுள்ள நேரங்களில் தங்களது கிராமங்களில் தீண்டாமை, மதுப்பழக்கம் போன்றவற்றை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முறையான கல்வியோடு, நேர்மை, கருணை, அன்பு, தேசப்பற்று, பண்பாடு, பாரம்பரியம் போன்ற சிறப்பியல்புகளிலும் கவனம் செலுத்துகின்றனர்.
கிராம மக்களிடையே அடிப்படை சுகாதாரம், ஊட்டச்சத்து, தூய்மை ஆகியன குறித்த விழிப்புணர்வையும் ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
மருத்துவ முகாம்கள்:
கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஓராசிரியர் பள்ளி அமைப்பு இணைந்து, மாதந்தோறும் கிராம மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு சாணார்பாளையம், திருப்போரூர், ஆற்காடு குப்பம், ஸ்ரீராமாபுரம் கண்டிகை, கூரம், தாங்கி, பூண்டி, மேல்மதுரங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள 1,400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஓராசிரியர் பள்ளி நிர்வாகத்தினரின் இப்பணிகளுக்காக கடந்த 2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த சமுதாயத் திட்ட அங்கீகாரமும், 'இந்தியா ரெய்ன்ஸ்' விருதும் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: மேலும், அப்போதைய தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிடம் இருந்து, இந்த விருதை அமைப்பின் கெளரவச் செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு, சிறந்த அரசு சாரா அமைப்பு விருதை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவனிடம் இருந்து அமைப்பின் தலைவர் கே.என்.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து கிராம மக்களுக்கும் கல்வி, சமூக நலப்பணிகள் செயல்படுத்தப்படும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.