சுடச்சுட

  

  பழைய பள்ளிக் கட்டடம் இடிப்பு: மாணவர்கள் அமர்வதில் சிக்கல்

  By DIN  |   Published on : 01st November 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  school

  அதிகத்தூரில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட பழுதடைந்த பள்ளிக் கட்டடம்.

  திருவள்ளூர் அருகே பள்ளியின் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டதால் மாணவர்களை அமர வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, விரைவில் புதிய கட்டடத்தை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்புள்ளது. 
  இதனால் பழைய பள்ளிக் கட்டடங்கள் மழைநீரில் நனைந்து இடிந்து விழும் ஆபத்து உள்ளது. 
  இதனை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களை உடனே இடித்து அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. 
  இதையடுத்து, கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிகத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. 
  இதனை ஏற்கெனவே இடிக்க வலியுறுத்தி பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். 
  அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், இந்த கட்டட வளாகத்தில் இருந்த அங்கன்வாடி மையம், 2 வகுப்பறைகள், பழைய சமையல் கூடம் ஆகியவை செவ்வாய்க்கிழமை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. 
  இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 110-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 
  தற்போது இங்கு 2 வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால், மாணவர்களை மரத்தடியில் அமர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  இந்நிலையில், அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் உடனே புதிய வகுப்பறைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்திலிருந்து, மின்கம்பிகள் தாழ்வாக கட்டடத்தை ஒட்டிச் செல்வதால், பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 
  இதனை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai