சுடச்சுட

  
  koovam

  கூவம் ஆற்றில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்.

  திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வந்தாலும் கூவம் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.
  திருவள்ளூர், காஞ்சிபுரம் , வேலூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது . இதனால், இப்பகுதிகளில் உள்ள குளங்களும், ஏரிகளும் நிரம்பி வருகின்றன. 
  இந்நிலையில் வேலூரில் மழை பெய்து வருவதால் பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு கல்லாறுக்கு வந்து சேரும்.
  இங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர், காவேரிபாக்கம் ஏரி நிரம்பினால் வரும் உபரிநீர் ஆகியவை திருவள்ளூர் அருகே உள்ள கேசவபுரம் அணைக்கட்டுக்கு வந்து சேரும். 
  இந்த அணைக்கட்டு நிரம்பினால் தலா 12 மதகுகள் வழியாக கொசஸ்தலை, கூவம் ஆறுகளுக்கு உபரிநீர் செல்லும்.
  இதில், கொசஸ்தலை ஆறு மணவூர், பட்டறைபெரும்புதூர், நாராயணபுரம் வழியாக வந்து, சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியை வந்தடையும். இதேபோல், கூவம் ஆறு பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் கிராமம் வந்து இரண்டாகப் பிரிந்து, சென்னை குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கும் , அந்த ஏரி நிரம்பினால் மற்றொரு மதகுகள் வழியாக உபரிநீர் கடலில் சென்று கலக்கிறது.
  தற்போது, இந்தப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை கடந்த சிலநாள்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. 
  ஆனாலும், கூவம் ஆறு நீர்வரத்து இன்றி காணப்படுகிறது. இதற்குக் காரணம் இந்த ஆறு செல்லும் வழித்தடங்களில் முள்புதர்கள் அகற்றப்படாமலும், ஆக்கிரமிப்புகள் பெருகியும் காணப்படுகின்றன.இதேபோல், இந்த ஆறுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வடகிழக்குப் பருவமழை பெய்த நிலையிலும், வெள்ளப்பெருக்கின்றி காணப்படுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.
  அதனால் இந்த ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் ஆதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதுகுறித்து புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறுகையில் , கூவம் ஆற்றின் இருபுறமும் விவசாய நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் என பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
  அத்துடன், ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி அதிகளவில் மணலையும் அள்ளி வருகின்றனர். 
  ஆற்றுப்படுகையில் உள்ள முள்புதர்களையும், இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai