பழவேற்காட்டில் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
By DIN | Published on : 04th November 2017 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பழவேற்காட்டில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
கடந்த 5 நாள்களாக பெய்து வரும், கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள பசியாவரம், சாத்தாங்குப்பம், எடமணிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி அங்கு நேரில் சென்று வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோட்டாட்சியருடன் பொன்னேரி வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள், ''எப்போது மழை பெய்தாலும் தங்கள் பகுதியை வெள்ளநீர் சூழ்ந்து, பெரிதும் அவதிப்பட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் கருத்து தெரிவித்தனர்.