Enable Javscript for better performance
தொடர் மழையால் 121 ஏரிகள் நிரம்பின: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    


    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 121 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும் , 237 ஏரி, குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொன்னேரி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம், அம்பத்தூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை காலை வரை பெய்தது. மாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. 
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியதாவது: மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்க குழுவினர் தயாராக உள்ளனர். பொதுமக்களை தங்க வைப்பதற்காக 178 தாற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 15 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 
    மாவட்டத்தில் மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 787 ஏரிகளும் , 14 ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் உள்ளன. இவை தவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன. தொடர் மழையால் இதுவரை 121 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. 237 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன என்று அவர் தெரிவித்தார். 
    மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில் ): 
    பொன்னேரி-103, தாமரைப்பாக்கம்-59, செம்பரம்பாக்கம்-48, அம்பத்தூர்-45, சோழவரம்-42, செங்குன்றம்-34, கும்மிடிப்பூண்டி-33, பூந்தமல்லி-25, திருவள்ளூர்-23, பூண்டி-8, ஊத்துக்கோட்டை, திருவேலங்காடு-6 (தலா), திருத்தணி-1.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai