சுடச்சுட

    

    இறால் பண்ணைகளுக்கு விஷமிட்ட கிராம மக்கள் : கும்மிடிப்பூண்டியில் அருகே பரபரப்பு

    By DIN  |   Published on : 06th November 2017 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gumudipoondi

    ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஓபசமுத்திரம் பகுதி மக்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வந்த 10 இறால் பண்ணைகளை ஓபசமுத்திரம் மக்கள் விஷம் வைத்து அழித்ததால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. 
    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளால் தங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் எனவும் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்.
    ஆனால், பண்ணை உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளின் படியும், அவர்களுக்கு உரிமையான பட்டா நிலத்திலுமே பண்ணைகளை நடத்துகின்றனர். இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறி இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை.
    இந்நிலையில், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, ஓபசமுத்திரம் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் கூடி இறால் பண்ணைகளை அவர்களே அழிப்பது என முடிவெடுத்தனர். அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓபசமுத்திரம் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்குச் சென்று விஷ மருந்தை கலந்தனர்.
    இதையடுத்து, தங்களது இறால் பண்ணைகளை ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷம் வைத்து அழித்து விட்டதாக இறால் பண்ணை உரிமையாளர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (34) , அதே பகுதியைச் சேர்ந்த இந்துமதி (53) ஆகியோர் தங்களது தலா 4 ஏக்கர் இறால் பண்ணையை பொதுமக்கள் அழித்துவிட்டதாகவும், பண்ணை உரிமையாளர் சரவணன் (33) தனது 3 ஏக்கர் இறால் பண்ணையை அழித்து விட்டதாகவும், தனபால், ஆ.முருகன், முருகன் ஆகியோர் தலா 2 ஏக்கர் இறால் பண்ணையை வைத்து விட்டதாகவும் கூறி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
    ஓபசமுத்திரம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பிலான இறால் பண்ணைகளில் 120 நாள் இறால் வளர்ப்பில் 60 நாள்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்னும் 60 நாள்களில் இறால்கள் விற்பனைக்கு தயாராக இருக்கும் சூழலில் பண்ணைகளுக்கு விஷம் வைக்கப்பட்டதால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்நிலையில், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஓபசமுத்திரம் பகுதி மக்கள், ஓபசமுத்திரம் பகுதியில் இறால் பண்ணைகளுக்கு பெண்கள் மட்டுமே விஷம் வைத்ததாகவும், இது தொடர்பாக கைது செய்தால் பெண்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் எனவும், ஆண்களை கைது செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தினர். 
    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணைக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai