சுடச்சுட

  
  tiruvallur

  வேப்பம்பட்டு வெங்கட்ராமன் நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்.

  திருவள்ளூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  திருவள்ளூர் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் தொடங்கிய மழை, ஞாயிற்றுக்கிழமையும் விட்டு, விட்டு கனமழையாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
  திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வேப்பம்பட்டு பி.எஸ்.பி. நகர், பூம்புகார் நகர், சுதர்சனம் நகர், வெங்கட்ராமன்நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளன. 
  மேலும், வேப்பம்பட்டு ரயிலார் நகர், பெருமாள்பட்டு, திருவூர் மற்றும் செவ்வாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. 
  இதனால், பொதுமக்கள் மருத்துவ தேவைக்குக்கூட வெளியில் செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். 
  ஒவ்வொரு முறையும் முழங்கால் அளவு மழைநீரில் நடந்து செல்வதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும், இப்பகுதியில் குடிநீர் வழங்கும் ஆழ்குழாய் அமைத்து, அதன் மோட்டார் மின் இணைப்பு பொத்தான்களை தாழ்வான இடத்தில் வைத்துள்ளனர். 
  இதன் காரணமாக, தண்ணீர் சூழும் போது பொத்தான்கள் மூழ்கும் அபாயமும் உள்ளது. அத்துடன், இரவு நேரங்களில் மழை பெய்வதால் பாம்புகள், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. 
  இதனால், குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சத்துடன் இருந்து வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
  இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, உஷாராணி ஆகியோர் கூறியதாவது: இப்பகுதியில் கடந்த 15ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். 
  அதிகாரிகள் வரும்போது, கால்வாய் அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டால், ஏன் தாழ்வான பகுதியில் குடியிருக்கிறீர்கள் என எங்களை மிரட்டும் தொனியில் அதிகாரிகள் பேசுகின்றனர். 
  இப்பகுதியில் எம்.எம்.டி.ஏ அனுமதி பெற்ற இடத்தில்தான் மனை வாங்கி, வீடு கட்டி குடியேறியுள்ளோம். 
  இந்த நிலையில் கடந்த 7 நாள்களாக மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை. இப்பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற கால்வாய் அமைத்து அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் கொண்டு விடுவதன் மூலம் இந்த மழை நீரை சென்னை குடிநீருக்கும் பயன்படுத்த முடியும் அல்லது அயத்தூர் ஏரிக்குத் திருப்பி விடுவதன் மூலம் விவசாயத்திற்கும் பயன்படும். இதன்மூலம் இப்பகுதியும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும். 
  இதை நிறைவேற்ற உடனே தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். 
  இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai