சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் விஷம் வைத்து இறால் பண்ணைகளை அழித்தது தொடர்பாக இருவரை ஆரம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். 
  ஓபசமுத்திரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் செயல்பட்டு வந்தன. இந்த இறால் பண்ணைகளால் தங்கள் பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி கடந்த 3 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், அரசு விதிகளுக்கு உள்பட்டே செயல்படுவதாகக் கூறி இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. 
  இந்நிலையில் இறால் பண்ணைகளை தாங்களே அகற்றுவது என முடிவெடுத்த ஓபசமுத்திரம் பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த 10 இறால் பண்ணைகளில் விஷ மருந்தைக் கலந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது இறால் பண்ணைகளை ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷம் வைத்து அழித்ததாகவும், இதனால் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய இறால் பண்ணை உரிமையாளர்கள் 7 பேர், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்களை அளித்தனர்.
  இந்நிலையில் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இறால் பண்ணைகளுக்கு பெண்கள் மட்டுமே விஷம் வைத்ததாகவும், இது தொடர்பாக கைது செய்தால் பெண்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
  இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ராஜன், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் விசாரணை செய்தனர். 
  இதைத் தொடர்ந்து, ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, ஜெயபால் மனைவி வனஜா(42), மாரிமுத்து மகன் சண்முகம்(42) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
  இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் ஓபசமுத்திரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai