சுடச்சுட

    
    people

    திருநின்றவூர் பேரூராட்சியில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத பேரூராட்சி உதவி இயக்குநரை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
    திருநின்றவூர் ஏரி சுமார் 835 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்த ஏரியில் மணல் மேவியும், முள்புதர்களுடன் கடந்த 70-ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இந்த ஏரியில் உள்ள முள்
    புதர்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதையும் தடுக்க முடியும். அத்துடன், இப்பகுதியின் குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க முடியும். இதை வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஏரியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் திருநின்றவூர் பேரூராட்சியில் உள்ள 10,11,12,13-ஆகிய நான்கு வார்டுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட வந்த அனைத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்குமார், செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளை பொது மக்கள் 
    முற்றுகையிட்டனர். 
    பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபினேசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.அறிவழகன் ஆகியோரும் முற்றுகையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    அதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் கொண்டு வெளியேற்றவும், ஏரியை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai