Enable Javscript for better performance
முக்கரம்பாக்கம் ஏரிக்கரை உடைந்தது- Dinamani

சுடச்சுட

    
    lake1

    முக்கரம்பாக்கம் ஏரிக்கரையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள்.

    தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முக்கரம்பாக்கம் ஏரிக்கரை மற்றும் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
    முக்கரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் பாசனத்தை கொண்டு முக்கரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    இந்நிலையில் தற்போதைய வடகிழக்குப் பருவ மழை காரணமாக முக்கரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு அதிகரித்து வந்தது. இந்த ஏரியை அப்பகுதி மக்களும், வருவாய், பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை தொடர்ந்து மழை பெய்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முக்கரம்பாக்கம் ஏரிக்கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும், பொதுப்பணித் துறையினரும் ஏரிக்கரை உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 2000 மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் ஏரிக்கரையில் ஏற்பட்டிருந்த பெரிய உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    அதே நேரம் பொதுப்பணித் துறையினரும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியால் மணலைக் கொட்டி ஏரிக்கரைகளை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் சீரமைப்புப் பணிகளை உடனிருந்துமேற்பார்வையிட்டார். 
    இந்நிலையில் முக்கரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதே போல திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தலைமையில் திமுகவினர் முக்கரம்பாக்கம் பகுதியில் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டனர். சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்ட அப்பகுதி மக்களுக்கு உணவு பொருள்களை வழங்கினர்.
    கும்மிடிப்பூண்டி வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர், முக்கரம்பாக்கம் பகுதி மக்கள் இணைந்து ஏரிக்கரை உடைப்பை சீரமைத்தனர். எனினும் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் விளை நிலங்களில் சூழ்ந்ததால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai