Enable Javscript for better performance
டெங்கு கொசுக்கள் உற்பத்தி: 2 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி: 2 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்

    By DIN  |   Published on : 09th November 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    narayanapuram

    நாராயணபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டெங்கு கொசு ஒழிப்புக்கான ஆய்வு நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் முத்து. 

    திருவள்ளூர் அருகே டெங்கு கொசுப்புழு உருவாக காரணமாக இருந்த 2 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 
    திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    இந்நிலையில், திருவள்ளூர்-திருத்தணி சாலையில் உள்ள புதூர் கிராம தொழிற்சாலைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காற்றாலை மின் உற்பத்தி ஆலையில் வாகனங்களின் டயர்கள் போன்ற பழைய பொருள்கள் வைத்துள்ள இடங்கள் எல்லாம் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகக் கூடிய வகையில் இருந்தன. இதனால், அந்த ஆலை நிர்வாகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல், எல்லப்பன் நாயுடு பேட்டையில் கனரக ஊர்தி பாகங்கள் தயார் செய்யும் ஆலையில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு தேவையற்ற பொருள்களை போட்டு வைத்திருந்த இடத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் கழிவுகளைக் கொட்டியிருந்தனர். அங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ஆலைக்கும் நோட்டீஸ் வழங்கி ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 
    இதுகுறித்து வருவாய் அலுவலர் முத்து கூறுகையில், ஏற்கெனவே இந்த ஆலைகளுக்கு டெங்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முறையாக பராமரிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    மேலும், கழிவுகளை ஒரு நாளுக்குள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அபராதத் தொகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்தவும், தவறும் பட்சத்தில் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது, வட்டாட்சியர் தமிழ்செல்வன், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai