சுடச்சுட

  

  வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் அவதி: 15 கி.மீ. சுற்றிச் செல்லும் அவலம்

  By DIN  |   Published on : 09th November 2017 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sathari

  திருவள்ளூர் அருகே பல ஆண்டுகளாகவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கிராமங்களுக்குள் செல்ல முடியாமல் 1 5 கி.மீ. வரையில் சுற்றிச் செல்லும் அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
  கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சத்தரை ஊராட்சி வழியாக கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மறுகரையில் உள்ள பள்ளக் காலனி, ஊர்க்காலனி, மேட்டுக் காலனி உள்ளிட்ட 3 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
  இப்பகுதிகளைச் சேர்ந்தோர் பேரம்பாக்கம், சத்தரை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்குப் பாலம் வசதி இல்லாததால் கூவம் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் நரசிங்கபுரத்தில் உள்ள கூவம் ஏரி, கலங்கள் ஏரி ஆகியவை நிரம்பி மழைநீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. 
  இதுபோன்று வெளியேற்றப்படும் நீரானது கூவம் ஆற்று வழியாக சத்தரை, திருவள்ளூர் மணவாளநகர் , அரண்வாயல், நேப்பியர் பாலம் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் சத்தரைப் பகுதியில் உள்ள ஆற்றுப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சிமென்ட் குழாய்கள் ஆகியவை சேதமடைந்தன.
  இதனால், பள்ளக்காலனி, ஊர்க்காலனி, மேட்டுக்காலனி பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் முழங்கால் அளவு செல்லும் ஆற்றுநீரில்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மருத்துவமனைக்கும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 
  இந்த ஆற்றில் அதிகமாக தண்ணீர் வரும்போதெல்லாம் மப்பேடு, பிஞ்சிவாக்கம் , கொண்டஞ்சேரி வழியாக 15 கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். அவ்வப்போது, ஆற்றுக்குள் மணல் இடறி வாகனங்களும் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது. 
  இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமன் கூறியதாவது: மழை வரும்போதெல்லாம் இந்த ஆற்றில் போக்குவரத்துக்கு வழியின்றி பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். அதோடு, அதிக தண்ணீர் வரும் போதெல்லாம் 15 கி.மீ வரையில் சுற்றிச் செல்கிறோம். 
  இதனால் கூடுதல் செலவு, காலவிரையம் ஏற்படுகிறது. இதை தடுக்க பாலம் மற்றும் தடுப்பணைகள் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். இதன் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.4.50 கோடியில் பாலம் அமைக்க அடித்தள பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னதாக மழைக்காலங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் சிமென்ட் குழாய்களுடன் மணல் மூட்டைகள் அடுக்கி பாதை அமைத்திருந்தனர். 
  ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாற்காலிகப் பாதை அடித்துச் செல்லப்பட்டது. அதனால், மீண்டும் தாற்காலிகமாக பாதை அமைத்து தந்தால் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும். அதோடு, கூவம் ஆற்று வெள்ள நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. 
  இதை தடுத்து தடுப்பு அணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai