டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்
By DIN | Published on : 10th November 2017 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரக்கேடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் 98 குழுக்கள் அமைக்கப்பட்டு கொசுப் புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரமற்றமுறையில் நோய் பரவக்காரணமாக தொழிற்கூடங்களை வைத்திருப்போருக்கு இம்மாவட்டத்தில் இதுவரையில் 2, 704 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 9 லட்சம் அபராதத் தொகையும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆட்சியர் சுந்தரவல்லி திரூர் பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு முகாம் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் பணியாளர்கள் ஈடுபடுகிறார்களா என்பது குறித்து பொதுமக்களிடையே கேட்டறிந்தார். அதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரையும் வழங்கினார். பின்னர் இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டு சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஜே.பிரபாகரன் (திருவள்ளுர்), கிருஷ்ணராஜ் (பூந்தமல்லி) நகராட்சிஆணையாளர் சித்ரா, வட்டாட்சியர்கள் தமிழ்செல்வன்(திருவள்ளுர்), ரமா(பூந்தமல்லி), அரசு அலுவலர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்புப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.