சுடச்சுட

  

  ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

  By DIN  |   Published on : 10th November 2017 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arest

  செல்வம் ,சஞ்ஜித்குமார்

  சென்னை மாதவரம் அருகே நிலமோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர். 
  பொன்னேரியைச் சேர்ந்த தம்பதி தாமோதரன் (73), ஜெயம்மாள் (62). இவர்களுக்குச் சொந்தமான 41 சென்ட் நிலம் மாதவரம் மஞ்சம்பாக்கம் பிரதான சாலை அருகே உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும். 
  இந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் மாதவரம் அருகே உள்ள மந்தைவெளி 2-ஆவது தெருவைச் சேர்ந்த பாஸ்கர்(46), சதீஷ்(41) ஆகிய இருவரும் ஈடுபட்டனர். பாஸ்கர் மின்வாரிய ஊழியர். சதீஷ், மாதவரத்தில் நடந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர்கள் இருவரும், பொன்னேரி நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (60), ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த மரகதம் (50) ஆகிய இருவரையும் அழைத்து வந்து, நில உரிமையாளர்கள் போல் நடிக்க வைத்து, மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி இடத்தை ராமச்சந்திரா நகரைச் சேர்ந்த சஞ்ஜித்குமாருக்கு (40) பொது அதிகாரப் பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 
  இதையடுத்து, சஞ்ஜித்குமார் கடந்த வாரம் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். நிலத்திற்கு சொந்தக்காரர்களான தாமோதரன், ஜெயம்மாள் தம்பதியின் மகன் சேகர்(40) சஞ்ஜித்குமாரிடம் இதைத் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அவர், இந்த நிலம் தனக்குப் பொது அதிகாரப் பத்திரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
  இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாதவரம் காவல் துணைஆணையர் கலைசெல்வத்திடம் சேகர் புகார்அளித்தார். மாதவரம் காவல் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன் மேற்பார்வையில், ஆய்வாளர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட செல்வம், மரகதம், சஞ்ஜித்குமார் ஆகியோரை புதன்கிழமை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பாஸ்கர், சதீஷ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai