சுடச்சுட

  

  கூட்டமாக வந்து தாக்கும் விஷக் குளவிகள்..! பீதியில் கிராம மக்கள்

  By  கும்மிடிப்பூண்டி  |   Published on : 11th November 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  n12

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எருக்குவாய் ஊராட்சிக்கு உள்பட்ட மணலியில் விஷக் குளவிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
   மணலி பகுதியில் உள்ள குருவராஜகண்டிகை - மணலி சாலையானது இரு பக்கமும் காப்புக் காடுகளால் சூழப்பட்டிருக்கும். மேலும் இந்த சாலையானது பல ஆண்டுகளாக அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
   இந்த காப்புக் காட்டு பகுதியில் விஷக் குளவிகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாய் கூடு கட்டி வந்த நிலையில், இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்து சாலையில் முகத்தை மூடியபடி நடந்து செல்கின்றனர். சாலை மோசமாக இருப்பதால் இரு சக்கர வாகனத்தில்கூட மெதுவாகவே செல்ல முடியும். அதனால் குளவிகளின் தாக்குதலில் இருந்து யாராலும் தப்ப முடியாது எனவும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாள்களாக இப்பகுதியை சேர்ந்த 4 பேரை விஷக் குளவிகள் கொட்டியதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   இதேபோல் இவ்வழியே சென்ற நாளிதழ் நிருபர் ஒருவரை விஷக் குளவிகள் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் சிலரும் விஷக் குளவிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
   இது குறித்து கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்புப் படையினர் காட்டுப் பகுதியில் விஷக் குளவிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் இங்குள்ள அகன்ற காப்புக் காட்டில் விஷக் குளவிகளை அழிப்பது இயலாது என்பதால், தொடர்ந்து சில நாள்கள் தீயணைப்புத் துறையினர் இங்கு முகாமிட்டு குளவிகளை அழிக்க வேண்டும் என்றும், மோசமான இந்த சாலையையும் சீரமைத்துத் தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai