சுடச்சுட

  

  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் கட்ட ரூ. 70.80 கோடி ஒதுக்கீடு

  By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் 4,165 வீடுகள் அமைக்க ரூ. 70.80 கோடி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   திருவள்ளூர் மாவட்டத்தில் வீடில்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கில், மத்திய அரசு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் மூலம் வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில், 4,165 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தலா ஒரு குடியிருப்புக்கு ரூ. 1.70 லட்சத்தில் அமைக்கும் வகையில் மொத்தம் ரூ. 70 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
   இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு பயனாளிகள் வறுமைக்கோட்டு பட்டியலில் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன், வீடு அமைக்கும் அளவுக்கு சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இதில், பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவோருக்கு, குடியிருப்புகள் அமைத்துக் கொள்ள தலா ரூ. 1.70 லட்சம் வழங்கப்பட உள்ளது.
   இத்திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளின் விவரங்கள்: வில்லிவாக்கம்-64, புழல்-62, மீஞ்சூர்-628, சோழவரம்-342, கும்மிடிப்பூண்டி-834, திருவாலங்காடு-211, திருத்தணி-356, பள்ளிப்பட்டு-120, இரா.கி.பேட்டை-219, திருவள்ளூர்-169, பூண்டி-293, கடம்பத்தூர்-243, எல்லாபுரம்-472, பூந்தமல்லி-152 என மொத்தம் 4,165 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
   தற்போது, இத்திட்டத்துக்கான பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதையடுத்து, பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொள்வதற்கான ஆணையும் வழங்கப்பட இருப்பதாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
   இத்திட்டம் மூலம் கடந்த ஆண்டு 6,576 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதும், நிகழாண்டில் 4,165 குடியிருப்புகளே ஒதுக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai