சுடச்சுட

  

  அடிப்படை வசதியின்றி கடம்பத்தூர் வாரச்சந்தை

  By  திருவள்ளூர்,  |   Published on : 13th November 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடம்பத்தூரில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   கடம்பத்தூரில் பழைய ஊராட்சி அலுவலகம் அருகே ரயில்வே மேம்பாலப் பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடத்தப்படுகிறது. இந்தச் சந்தையில் காய்கறிகள், மளிகை சமான்கள், பலகாரங்கள் என சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைக்கின்றனர். இங்கு வியாபாரத்திற்கேற்ப வாடகையாக ரூ.100 முதல் ரூ.400 வரையில் வசூலிக்கப்படுகிறது. இதனால் கடம்பத்தூர் ஊராட்சிக்கு வாரந்தோறும் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் வருவாய் கிடைக்கிறது.
   இச் சந்தையில் திருப்பாச்சூர், விடையூர், ஏகாட்டூர், மப்பேடு, இடையஞ்சேரி உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மளிகை சாமான்கள் , காய்கறிகள் உள்பட பல்வேறு பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்தச் சந்தை காலையில் தொடங்கி, இரவு வரையில் நடைபெறுவது வழக்கம். இதுபோன்று அதிகம் பேர் வந்து செல்லும் சந்தையில் அடிப்படை வசதிகளான தெருவிளக்குகள், கழிப்பறை வசதி எதுவும் இல்லை. அதிலும் , இரவு நேரங்களில் பொருள்கள் வாங்கிச் செல்லும் போது சமூக விரோதிகள் பெண்களிடம் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
   இது குறித்து சமூக ஆர்வலர் மோகன் கூறுகையில், இச்சந்தை வியாபாரிகளிடம் ஊராட்சி செயலாளர்தான் வாடகை வசூல் செய்ய வேண்டும். ஆனால், இங்கு தனிநபர் மூலம் வசூலிக்கும் போது ஒரு ரசீதும், ஊராட்சியில் கணக்கு காட்டும் போது தனி ரசீதும் எழுதி முறைகேடு செய்து குறைந்த அளவிலேயே வருவாய் காட்டுகின்றனர். இதனால், ஊராட்சிக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரையில் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகளைக் களைய வேண்டும். மேலும், சந்தையில் தெருவிளக்குகள், கழிப்பறை ஆகிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai