Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பின் பிடியில் திருத்தணி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பின் பிடியில் திருத்தணி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

    By  திருத்தணி,  |   Published on : 13th November 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் வைத்து, வியாபாரம் செய்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். உடனடியாக பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திருத்தணியில் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், சோளிங்கர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, சித்தூர், ஆந்திர மாநிலம் நகரி, புத்தூர், ரேணிகுண்டா, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
     இதுதவிர, இந்த பேருந்து நிலையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்வதால், அதிகாலை 3.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை, பயணிகள் அதிகளவில் பேருந்துக்காக காத்திருப்பர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளது.
     ஆனால், பேருந்து நிலையத்துக்குச் செல்லும் நுழைவாயில் பகுதியை, சில தள்ளுவண்டி கடைக்காரர்களும், பழக்கடைக்காரர்களும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், பயணிகள் பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு வழியின்றியும், பேருந்துகள் வருவதை அறிந்து கொள்ள முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று காத்திருக்கும்போது, வியாபாரிகள் கடைமுன் நிற்கக் கூடாது எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர்.
     எனவே, இனியாவது, ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai