சுடச்சுட

  

  டிசம்பர் 2-இல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

  By நமது நிருபர், திருவள்ளூர்,  |   Published on : 13th November 2017 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiru

  கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவள்ளூர் பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி யில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
   கார்த்திகை மகா தீபத் திருநாள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கடுத்து பொங்கல் பண்டிகை வருகிறது.
   இவ்விழாக்களில் அகல் விளக்குகள், பானைகள் உள்ளிட்டவை முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இதனை முன்னிட்டு, விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
   திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், புட்லூர், கொசவன்பாளையம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆரணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்களால் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல், திருவள்ளூர், காக்களூர் பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
   இப்பகுதி ஏரிகளில் இருந்து கிடைக்கும் சுத்தமான களிமண்ணை கொண்டு வந்து பதப்படுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து, கைகளால் சிறிய, பெரிய அளவிலான அகல் விளக்குகள் மற்றும் பூந்தொட்டிகளை தயார் செய்கின்றனர். ஒரு நாளைக்கு 500 பெரிய அகல் விளக்குகள் வரையில் ஒருவர் தயார் செய்ய முடியும்.
   அதேபோல், சிறிய அளவு என்றால் 1,000 வரையில் விளக்குகளை தயார் செய்ய முடியும். இதற்கு கூலியாக ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட விளக்குகள் ஒவ்வொன்றும் தரத்துக்கேற்ப தலா ரூ. 1 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
   வியாபாரிகள் முன்கூட்டியே தேவையின் அடிப்படையில் கொடுக்கும் ஆர்டர்களுக்கேற்ப அகல் விளக்குகளை உற்பத்தி செய்து அளிப்போம் எனவும், தற்போதைய நிலையில் அகல் விளக்குகள் தேவைக்கான ஆர்டர்கள் வருவதில்லை எனவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
   இதுகுறித்து காக்களூரைச் சேர்ந்த அகல் விளக்குகள் தயார் செய்யும் தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது:
   இந்த அகல் விளக்கில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம். அகல் விளக்குகள் தயார் செய்வதற்கான களிமண் ஏரிகளில் இருந்து கொண்டு வருகிறோம். இவை மீன்பாடி வாகனத்தில் ஒரு லோடு ரூ. 1,000 விலை கொடுத்து வாங்குகிறோம். அதேபோல், விறகும் விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த ஒரு லோடு மண்ணில் பதப்படுத்தி, தரத்துக்கேற்ப 10 ஆயிரம் விளக்குகள் வரை தயார் செய்ய முடியும். தற்போதைய நிலையில், கைத்தொழிலுக்கு எதிராக இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் அகல் விளக்குகளை தயார் செய்கின்றனர். இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளன. ஆனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத களிமண் அகல் விளக்குகளின் விற்பனை குறைந்து வருகின்றன. இதனால் தொழிலிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai