Enable Javscript for better performance
குடியிருப்புகளை அகற்றக் கூடாது: ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புகளை அகற்றக் கூடாது: ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையீடு

    By  திருவள்ளூர்,  |   Published on : 14th November 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் 3 நாள்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
     பூந்தமல்லி நகராட்சிக்கு உள்பட்ட குமணன்சாவடியில் தனியார் திரையரங்கைச் சுற்றி உள்ள குடியிருப்புகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருப்பதாகவும், 3 நாளில் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.
     இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     இப்பிரச்னையில் பொதுமக்களுக்கு ஆதரவாக திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்த மாவட்ட தி.மு.க. சட்டப்பிரிவு இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் சேக்தாவூத் ஆகியோர் இதுகுறித்து கூறியதாவது:
     இக்குடியிருப்புகள் நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் இருப்பதாகக் கூறி அகற்றப் போவதாக வருவாய் துறையினர் மூலம் ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, நீர் நிலைகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை முறையாக அளக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்தால் பல ஆண்டுகளாக வாழ்ந்து மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடு செய்யப்படும் என்றும் கோட்டாட்சியர் உறுதியளித்திருந்தார்.
     இந்நிலையில், வரும் 3 நாள்களில் வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த் துறையினரால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கிடைத்த வருவாயைக் கொண்டு குடியிருப்புகள் அமைத்து பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள்.
     இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல், தனியார் திரையரங்கிற்கு ஆதரவாக வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த மனு மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai