சுடச்சுட

  

  ஆட்டோ ஓட்டுநர் சாவில் மர்மம்: ஆட்சியரிடம் உறவினர்கள் புகார்

  By DIN  |   Published on : 15th November 2017 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  application1

  ஆட்டோ ஓட்டுநர் சாவில் மர்ம உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இறந்தவரின் தாயார் மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். 
  திருவள்ளூரை அடுத்த நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் தாயார் மஞ்சுளா மற்றும் உறவினர்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நத்தமேடுபகுதியில் எனது மகன் விஜயகுமார் (20) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இந்நிலையில் விஜயகுமாரை கடந்த 11-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, சாமுவேல், மூர்த்தி, மணி ஆகியோர்
  குடிபோதையில் தகராறு செய்து தாக்கியுள்ளனர். 
  அதைத் தொடர்ந்து, அங்கு வந்த திருநின்றவூர் போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரை இரவு 11 மணிக்கு மர்ம நபர்கள் 4 பேர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை 6 மணியளவில் பார்த்தபோது நத்தம்பேடு ஏரியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் விஜயகுமாரின் சடலத்தை
  உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். 
  இதையடுத்து, திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில், போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் தகராறு செய்த 4 பேரையும் அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தோம். ஆனால், மாலையில் 4 பேரையும் விடுவித்தனர். இதுகுறித்து காவல் சார்பு ஆய்வாளரிடம் கேட்டதற்கு, விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாகவும்,
  தாங்கள் எதுவும் செய் ய முடியாது எனவும் கூறிவிட்டார். 
  இதேபோல், சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தாலும், அப்புகார் மனு குறித்து விசாரிக்க திருநின்றவூர் ஆய்வாளருக்கே அனுப்பப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை செய்து உரிய நீதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
  இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai