சுடச்சுட

  
  lake

  கரடிப்புத்தூர் பகுதியில் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள ஏரிக்கரை.

  கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் பகுதியில் உள்ள ஏரியின் கரையானது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் பகுதியில் 150 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீரைக் கொண்டு, ஏரியை ஒட்டி உள்ள 250 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன.
  இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் இந்த ஏரியின் மதகை ஒட்டிய கரை உடைந்தது. இதையடுத்து, மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரியில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் தடுக்கப்பட்டது.
  அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஏரிக்கரையை சரி செய்ய பொதுப்பணித் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளிடமும், மக்கள் தொடர்பு முகாம், ஜமாபந்தி ஆகியவற்றில் இப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
  இந்நிலையில், தொடர் மழை காரணமாக இந்த ஏரி நிரம்பி வருகிறது. தற்போது இந்த ஏரியின் கரையில் 2015-ஆம் ஆண்டு உடைப்பின் மீது போடப்பட்ட பெரிய பெரிய கற்கள் பெயரத் தொடங்கியுள்ளது.
  இதனால், அதன் வழியே ஏரி நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது. 
  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி உறுப்பினரான இஸ்ரவேல் கூறியதாவது: தேர்வாய் சிப்காட்டை ஒட்டியுள்ள கரடிப்புத்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டைக்காக இப்பகுதி மக்கள் கொடுத்து விட்டனர். இந்நிலையில், இருக்கும் விவசாயப் பயிர்களைக் காக்கும் இந்த ஏரியானது பராமரிக்கப்படாத சூழலில், ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறும் நீர் விவசாயப் பயிர்களை அழிப்பதோடு, தண்ணீரும் வீணாகிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த மழைக்கு இந்த ஏரி தாங்காது என்றார்.
  இந்த ஏரிக்கரை முழுவதும் சேதமடையாமல் இருக்க, ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பாறைகள், மணல் மூட்டைகளை வைத்து தாற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  கரடிப்புத்தூர் பகுதியில் மோசமான நிலையில் உள்ள ஏரிக்கரையை சரி செய்ய பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இந்த ஏரியை காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai