சுடச்சுட

  

  குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி: படகு வசதி செய்து தரக் கோரிக்கை

  By DIN  |   Published on : 15th November 2017 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  water

  திருவள்ளூரை அடுத்த நத்தமேடு பாலாஜி நகர் இணைப்பு 2 குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர்.

  திருவள்ளூர் அருகே குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ள நீரால் வெளியில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் கடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் படகு வசதி செய்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  திருவள்ளூர் அருகே நத்தமேடு கிராமத்தைச் சுற்றிலும் ராகவேந்திரா நகர், பாலாஜி நகர் 1,2,3 ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால், அப்பகுதியில் நத்தமேடு ஏரி நிரம்பியது. ஆனால் மதகுகள் திறக்கப்படாததால் வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் குடியிருப்புகளிலேயே முடங்கியுள்ளனர். அப்படியே அத்தியவாசிய பொருள்கள் வாங்குவதற்குச் சென்றால் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
  பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்வதால் ஆடைகள் நனையும் நிலை உள்ளது.
  இதேபோல், மழை பெய்யும் போதெல்லாம் ஏரியைத் திறந்துவிடாததால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்து விடுவதால் அவதிப்படுவதாகவும், ஏரி மதகுகளை திறந்துவிட்டாலும் வெள்ள நீர் வடிய இரண்டு வாரம் ஆகும் நிலையிருப்பதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். 
  மேலும், பொதுமக்கள் கூறியதாவது: இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத நிலையில், விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. அதிலும், இப்பகுதியில் பாலாஜிநகர் 2-வது தெருவைச் சேர்ந்த இந்துமதி (26), 1-வது தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி (21) , பிளஸ் 2 மாணவர்கள் சஞ்சய், சந்தோஷ் ஆகியோரை இரவு நேரத்தில் பாம்புகள் கடித்தன. இதனால் அவர்களை கட்டிலில் வைத்து தூக்கிக் கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியுள்ளோம். இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்க முடியாத நிலையில்
  தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகிறோம். இதுவரை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த வெள்ளநீரை கடக்க படகு வசதியும் செய்து தரவில்லை. இதனால், அனுமதியின்றி ஏரி மதகுகளை அடைத்து மீன் வளர்ப்போரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
  இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்புச் சங்கத்தின் தலைவர் ஜி.நந்தகுமார் கூறுகையில், பாக்கம், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏரி நிரம்பி உபரிநீரும், வெள்ள நீரும் இந்த வழியாக தாங்கல்
  ஏரிக்குச் சென்றடைகிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கிராம பிரமுகர்களின் ஆதரவுடன் எவ்வித அனுமதியின்றியும் ஏரியில் மீன் வளர்க்கின்றனர். ஏரியை திறக்கச் சென்றால் பிரச்னையில்
  ஈடுபடுகின்றனர். 
  இதனால், கடந்த 4 நாள்களாக தண்ணீருக்குள் குடியிருந்து வருகிறோம். இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கட்டுப்பாடு அறைக்கு வெள்ள நீரை வெளியேற்றவும் தகவல் தெரிவித்தோம். மேலும்,
  போக்குவரத்துக்கு எளிதாகச் சென்று வரும் வகையில் படகுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தோம். ஆனால், இதுவரை தீவுக்கு மத்தியில் குடியிருந்து வருவது போல் உள்ளது. இதனால் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai