சுடச்சுட

  

  கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 16th November 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sundaravali

  வீடுகளை தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 
  திருத்தணி நகராட்சி 2, 4- வது வார்டில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாம்களை ஆட்சியர் எ. சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
  அப்போது தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், நீர் தேங்குவதற்கு ஏதுவாக இருக்கும் பொருள்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்துமாறு, சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நகராட்சிப் பணியாளர்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரில் எண்ணெய் பந்துகள் போடப்பட்டு வருவதைப் பார்வையிட்டார்.
  பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
  திருவள்ளூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 7,920 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 நாள் பணியாளர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  வீடுகளில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளும்போது கொசு ஒழிப்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்கள், மொட்டை மாடிகள் மற்றும் காலிமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில், இதுவரை பல்வேறு பகுதிகளில் 14 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மருத்துவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
  திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் ஜே. பிரபாகரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், திருவள்ளுர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai