சுடச்சுட

  

  வள்ளலார் நகரில் இருந்து பொன்னேரிக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தம்: மாணவர்கள், வியாபாரிகள் அவதி

  By DIN  |   Published on : 17th November 2017 02:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mtc-bus

  வள்ளலார் நகரில் இருந்து பொன்னேரிக்கு இயக்கப்பட்டு வந்த (தடம் எண் 558) பேருந்து சேவை நிறுத்தப் பட்டதால், இப்பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 
  இங்கு, 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோயம்பேடு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், பழவேற்காடு, செங்குன்றம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
  அதேபோன்று மாதவரம், பேசின்பாலம், பூந்தமல்லி, ஆவடி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 
  ஒவ்வொரு பேருந்தாக நிறுத்தம்.... 
  அண்ணாநகர் பணிமனையில் இருந்து கோயம்பேடு-பொன்னேரி வழித் தடத்தில் இயக்கப்பட்டு வந்த தடம் எண் (558சி) பேருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 
  இதே போல் ஆவடியில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பட்டாபிராம்-பொன்னேரி (தடம் எண் 536) வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவையும் காரணம் ஏதுமின்றி சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 
  மேலும் பேசின் பாலத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையில் எண் 558 பேருந்து வள்ளலார் நகரில் இருந்து வியாசர்பாடி, செங்குன்றம் வழியாக பொன்னேரிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேருந்துகளில் ஒரு பேருந்தின் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த பேருந்தின் சேவையும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இப்பேருந்தில், நாள்தோறும் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோர், கடந்த 3 நாள்களாக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். 
  இரண்டு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை.... 
  தற்போது வள்ளலார் நகருக்குச் செல்ல வேண்டும் என்றால் பொன்னேரியில் இருந்து செங்குன்றம் சென்று, அங்கிருந்து வள்ளலார் நகருக்கு மற்றொரு பேருந்தில் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
  ஏற்கெனவே கோயம்பேடு, ஆவடி பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், வள்ளலார் பணிமனையில் இருந்தும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
  இதுகுறித்து பொன்னேரி பகுதி மக்கள் கூறுகையில், பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகள், லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, கிராமப் பகுதியாக உள்ள பொன்னேரி பகுதிக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளை நிறுத்துவது வருத்தம் அளிக்கிறது என்கின்றனர். எனவே பொன்னேரி பகுதிக்கு மேற்கண்ட பணிகனைகளில் இருந்து வந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் இருந்து பொன்னேரி-செங்குன்றம், செங்குன்றம்-பழவேற்காடு வழித்தடத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
  இந்த பணிமனையில் இருந்து பொன்னேரி-கோயம்பேடு, பொன்னேரி-வள்ளலார் நகர், பொன்னேரி-அம்பத்தூர் தொழிற்பேட்டை, பொன்னேரி- கிண்டி தொழிற்பேட்டை, பொன்னேரி-தாம்பரம் ஆகிய வழித் தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதும் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai