சுடச்சுட

  

  அணைக்கட்டு நிரம்பியும் நீர் விரயம்: விவசாயிகள் வேதனை

  By DIN  |   Published on : 18th November 2017 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  lake

  பொன்னேரி பகுதியில் பெய்த கனமழையால் ஆரணி ஆற்றில் ரெட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீர் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
  பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10நாள்களாக கனமழை பெய்ததது. மேலும் ஆரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியான ஆரணி, புதுவாயல், ஏலியம்பேடு, வைரங்குப்பம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆரணி ஆறு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கர்னேத் நகர் பகுதியில் தொடங்கி பழவேற்காட்டில் உள்ள உவர்ப்பு நீர் ஏரியில் கலக்கிறது.
  நாகலாபுரம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சமநாயுடு கண்டிகை, சுருட்டப்பள்ளி என 65கி.மீ. தூரம் ஆந்திர மாநிலத்திலும், ஊத்துக்கோட்டை, ஆரணி பெரியபாளையம், கவரப்பேட்டை, ஏலியம்பேடு, பொன்னேரி, லட்சுமிபுரம், ரெட்டிப்பளையம், ஆண்டாள் மடம் என 65கி.மீ. தூரம் தமிழகத்திலும் ஆரணி ஆறு ஓடுகிறது. இறுதியில் ஆரணி ஆற்றின் நீர் பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் கலக்கிறது. 
  ஆரணி ஆற்றில் சுருட்டப்பள்ளி, பாலேஸ்வரம், கே.ஆர் கண்டிகை, லட்சுமிபுரம், ரெட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் ஆரணி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு சேமிக்கப்படும் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெட்டிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வெளியேறும் உபரி நீர் தத்தைமஞ்சி, சிறுபழவேற்காடு, ஆண்டாள்மடம் வழியாக சென்று பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் வீணாக கலக்கின்றது. 
  இது போன்று பழவேற்காடு ஏரியில் சென்று கலப்பதை தவிர்க்கும் வகையில், தத்தைமஞ்சி, ஆண்டாள்மடம் பகுதியில் தடுப்பணைகள் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
  ஆண்டாள் மடம், தத்தைமஞ்சி பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படுவதன் மூலமாக, இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் இருக்கும் உவர்ப்பு தன்மை மாறும், மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். அத்துடன் இப்பகுதியில் இரண்டு போகம் நெல் பயிரிட்டு விவசாயம் செய்ய முடியும். எனவே, ஆண்டாள்மடம், தத்தைமஞ்சி பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai