சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு ரூ.130 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு: ஆட்சியர் தகவல்

  By  திருவள்ளூர்,  |   Published on : 19th November 2017 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிகழாண்டில் ரூ.130 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
   திருவள்ளூரில் மாவட்ட அளவிலான 64-ஆவது கூட்டுறவு வாரவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி பேசியதாவது: கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்திலேயே கூட்டுறவு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
   இதில் கடந்தாண்டு 17,083 பேருக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல், பொது விநியோக திட்டம் மூலம் 5 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 1,800 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இது, வேளாண் சார்ந்த மாவட்டம் என்பதால் கடந்தாண்டு 111 கோடிக்கு இலக்கு நிர்ணயித்து ரூ. 97.98 கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டன. மேலும், கடந்தாண்டு வடகிழக்கு, தென் கிழக்குப் பருவ மழை கிடையாது. தற்போதைய நிலையில் வடகிழக்குப் பருவமழை 85 சதவீதம் வரையில் பெய்ததால் ஏரி,குளங்கள் நிரம்பியுள்ளன. எனவே, நிகழாண்டில் ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரையில் 9,714 பேருக்கு ரூ.49 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது.
   இதேபோல், விவசாயிகள் சம்பா பருவத்திற்கான காப்பீட்டு தொகையை எளிதாக செலுத்தும் வகையில் 139 சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4,700 மெட்ரிக் டன் வரையில் உரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் 15 சதவீதம் குறைந்த விலையில் உரங்களைப் பெற்றுக் கொள்ளவும் வேளாண் மருந்தகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   கடந்தாண்டு வேளாண் மருந்தகம் மூலம் ரூ.35 லட்சம் வரையில் உரம் விற்பனை செய்யப்பட்டது.
   அதேபோல், நிகழாண்டில் இருமடங்காக விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகளையும், சிறந்த கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயம் போன்றவற்றையும் ஆட்சியர் வழங்கினார் .
   இவ்விழாவில், அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, எம்எல்ஏக்கள் பலராமன்(பொன்னேரி), பி.எம்.நரசிம்மன்(திருத்தணி), கே.எஸ்.விஜயகுமார்(கும்மிடிப்பூண்டி), காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ம.தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   விழாவுக்கான ஏற்பாடுகளை, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலை தலைவர் கோ.கந்தசாமி, கூட்டுறவு அச்சகத் தலைவர் கே.பி.எம்.எழிலரசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai