சுடச்சுட

  

  அடிப்படை வசதியின்றி தவிக்கும் கொப்பூர் கிராம இருளர் சமுதாயத்தினர்

  By  நமது நிருபர், திருவள்ளூர்  |   Published on : 20th November 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அருகே கொப்பூர் கிராமத்தில் உள்ள இருளர் காலனி மக்கள் அடிப்படை வசதிகளின்றி 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
   திருவள்ளூரை அடுத்த கொப்பூர் கிராமத்தில் உள்ள இருளர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் வசித்து வருகின்றனர்.
   இவர்கள், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவற்றை பெற்றிருந்தாலும் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
   மேலும் இப்பகுதி மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், தமிழக அரசின் சலுகைகளைப் பெறவும் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
   இதனால் இவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
   இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவேக் கூறுகையில், தாங்கள் வசிக்கும் பகுதி தாழ்வான பகுதி என்பதால் ஆண்டு தோறும் மழை பெய்யும் போதெல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மழை வெள்ள காலத்தில் பாம்பு, தேள், வண்டுகள், பூரான் போன்ற விஷ ஜந்துகள் வந்து அப்பகுதி மக்களைக் கடிப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது என கவலை தெரிவித்தார்.
   இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் முல்லர் கூறுகையில், கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக இப்பகுதியில் பல நாள்களாக மழைநீர் தேங்கியுள்ளது.
   மழை வெள்ள நீர், கழிவு நீராக மாறி அப்பகுதியில் தொற்று நோய்களை ஏற்படுத்துவதாகவும், அதனால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்கள் வைரஸ், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இப்பகுதியைச் சேர்ந்த 80 வயதான பொன்னம்மா உள்ளிட்ட வயதான முதியவர்களுக்கு கூட முதியோர் உதவித் தொகை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
   இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை யாரும் செவிசாய்க்க வில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
   எனவே கொப்பூர் இருளர் சமுதாய மக்கள் தங்களுக்கு நிரந்தரத் தீர்வாக மாற்று இடம் வழங்கி, சாலை குடிநீர் மற்றும், தெரு விளக்கு வசதி ஆகியவற்றை அமைத்துத் தர வேண்டும் எனவும், அதே ஊராட்சியில் மேடான வனத் துறை பகுதியில் தங்களுக்கு, பட்டாவுடன் மாற்று இடம் மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai