சுடச்சுட

  

  பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியுறும் பக்தர்கள்!

  By  நமது நிருபர், பொன்னேரி  |   Published on : 21st November 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  n17

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
   பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே கும்மமுனிமங்கலம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது.
   அகத்திய முனிவர் இங்குள்ள ஆனந்த புஷ்கரணியில் (திருக்குளம்) குளித்து, ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
   இக்கோயில் ஆனந்தவல்லி தாயார் அகத்தீஸ்வரருக்கு வலது பக்கத்தில் நின்ற நிலையில், திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
   மேலும் இக்கோயிலில் சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர், விநாயகர், முருகர், பிரம்மா, குரு பகவான், சூரியர், சந்திரர் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகள் உள்ளன. அத்துடன் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
   இக்கோயிலின் முன்புறம், பதினாறு கால் மண்டபமும், அதன் அருகில் வற்றாத ஆனந்த புஷ்கரணியும் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
   அத்துடன் திருவாயர்பாடி பகுதியில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது நந்தி வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அகத்தீஸ்வரரும், கருட வாகனத்தில், கரிகிருஷ்ண பெருமாளும் சந்திக்கும் வைபவம் இம்மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
   பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் நடைபெறும் இவ்விழாவில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்.
   பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இக்கோயில் முன்பு அமைந்துள்ள திருக்குளத்தில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு அகத்தீஸ்வரரை வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, பக்தர்கள் இங்கு வந்து அகத்தீஸ்வரரை வழிபடுகின்றனர்.
   இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக அமாவாசையன்று கோயில் வளாகத்தில் இரவு தங்கியிருந்து, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அகத்தீஸ்வரரை வழிபாடு செய்வது வழக்கம்.
   ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குளியலறை, கழிவறை, பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை.
   இதனால் வெளியூரில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
   எனவே, இப்பகுதியில் கழிப்பறை கட்டடம் ஒன்றை அமைக்கவும், அமாவாசையில் பக்தர்கள் தங்கிச்செல்ல சிறு குடில்கள் அமைத்துத் தரவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai