சுடச்சுட

    

    100 நாள் வேலை உறுதி திட்டம்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

    By  திருவள்ளூர்,  |   Published on : 21st November 2017 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி பகுதியில் 100 நாள் வேலை உறுதி திட்டம் முறையாக செயல்படவில்லை என அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்காததைக் கண்டித்து 200}க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
     பனையஞ்சேரி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரி, குளம் கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இதுவரை செய்துள்ளனர். ஓர் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 150 நாள்கள் வேலை வழங்கப்பட்டது.
     இந்நிலையில் கடந்த ஓராண்டாக இப்பகுதியில் உள்ள பெண்கள் 400 பேர்களில் வெறும் இருபது பேருக்கு மட்டும் வேலை தருவதாகவும் இப்பகுதிப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
     இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து இப்பகுதிப் பெண்கள் 400 பேருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     இதைத் தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கையை நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai