சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் மகப்பேறு, குழந்தைகள் நலக் கட்டடம்: சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் தகவல்

  By DIN  |   Published on : 22nd November 2017 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tvl

  திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் மகளிர் சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்ட மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம். நரசிம்மன். உடன் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள்.

  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப் பிரிவு கட்டடம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதாக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தெரிவித்தார். 
  திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். 
  திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்த சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினரை ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மருத்துவத்துறை இணை இயக்குநர் தயாளன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் ஆகியோர் வரவேற்றனர்.
  பின்னர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். 
  பின்னர், பி.எம்.நரசிம்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு துறைகளில் களப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு திட்டங்களை மேலும் செம்மையாக நிறைவேற்ற இக்குழு உறுதுணையாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 6-ஆவது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தைத் தேர்வு செய்து மதிப்பீட்டுக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அரசு ரூ.18 கோடியில் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் நலப் பிரிவுக்கான கட்டடப் பணிகள் தொடங்க இருக்கிறது. அதேபோல், இந்த மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி பொருத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும். இதேபோல் தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரைநிகழாண்டில் மட்டும் ரூ. 1,348 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 
  மேலும், மகப்பேறு சிசு மரண விகிதத்தை குறைப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பல்வேறு சலுகைகள் வழங்க ரூ.1000 கோடி வரையில் வழங்கியுள்ளது. இன்னும் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்து இதுபோன்ற திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசிடம் பரிந்துரை செய்வோம் என்றார். 
  அதைத்தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகை, நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரையறை, அதன் பயன், அத்திட்டத்தின் செயல் முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை 10 பேருக்கும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் 10பேருக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகைக்கான காசோலையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தையல் பயிற்சி பெற்றுள்ள பெண்களுக்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் 10 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக 5 பேருக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும் மற்றும் 5 பேருக்கு திருமண உதவித்தொகையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் மூலம் 10 பேருக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
  இதையடுத்து, மாதவரம் அரசு மருத்துவமனை, வடகரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கண்டிகாவனூர் தடுப்பணை, அலமாதி ஊராட்சி, எடப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உப்பரபாளையம் அங்கன்வாடி மையம், திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை, திருவள்ளூர் நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் திருத்தணி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டனர். 
  இந்நிகழ்வில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, ஆர்.கனகராஜ், இரா.குமரகுரு, கே.பி.பி.சாமி, எஸ்.சுதர்சனம், எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், டாக்டர்.வி.பி.பி.பரமசிவம் கே.பி.பி.பாஸ்கர், ப.மனோன்மணி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), பலராமன் (பொன்னேரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai