குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவி சாவு
By DIN | Published on : 23rd November 2017 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

திருத்தணி அருகே வங்கனூர் கிராமத்தில் 9 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவி குளத்தில் விழுந்து இறந்தார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகனும் 5 மகள்களும் உள்ளனர். இதில் 5ஆவது மகள் பவ்யா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு திரும்ப பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் மாலை வீட்டிற்கு வராததால் அக்கம் பக்கத்தில் உள்ள தோழிகள் வீட்டில் பவ்யாவை அவரது பெற்றோர் தேடிப் பார்த்தனர்.
பவ்யாவை எங்கும் காணாததால், அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், வங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மாணவியின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் மர்ம மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.