Enable Javscript for better performance
குப்பை கழிவுகளால் மாசடைந்து வரும் பாலவாக்கம் ஏரி- Dinamani

சுடச்சுட

    
    palavakkam

    குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு மாசடைந்து காணப்படும் பாலவாக்கம் ஏரி.

    திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அருகே பாலவாக்கத்தில் உள்ள ஏரியில் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
    பாலவாக்கம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. மழை நீர் சேகரிப்பு ஏரியாகவும், விவசாய பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. 
    மழைக் காலத்தில் பெய்கின்ற நீரை சேமித்து ஆழ்துளை கிணறு வழியாக குடிநீராகவும், உபரி நீர் விவசாயத்திற்கும் பயன்பட்டு வரும் இந்த ஏரியில் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதால்,
    இப்பகுதி மக்கள் தற்போது சுகாதாரமற்ற தண்ணீரையே குடித்து வருகின்றனர். இந்த அசுத்தமான தண்ணீரே இப்பகுதி விவசாய நிலத்திற்கும் செல்கிறது. இதனால் விவசாயிகள் இந்த ஏரி நீரை பாசனத்திற்கு பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
    பாலவாக்கம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்கும் பயிற்சியை மகளிர் குழுவினருக்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் பயன் கிடைக்கும். ஏரியும் மாசடையாமல் இருக்கும். மேலும், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரும், விவசாயிகளுக்கு நல்ல பாசன வசதியும் கிடைக்கும். 
    எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலவாக்கம் பகுதியில் ஏரியில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டப்படுவதைத் தடுத்தி நிறுத்தி இந்த ஏரியையும், நீர் மாசால் ஏற்படும் தொற்று நோய் அபாயத்தில் இருந்து பொதுமக்களையும் காக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தற்போது வடகிழக்குப் பருவ மழை காரணமாக இந்த குப்பைகள் எல்லாம் மழை வெள்ளத்தோடு வந்து ஏரி முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    இது குறித்து பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் கூறுகையில்: ஏரிக் கரையை ஒட்டி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 
    இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு நீரேற்றும் வகையில் இந்த ஏரியில் 200 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. 
    தற்போது ஏரியில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுகள் ஏரி நீரில் கலந்து, ஏரியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் வழியே குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இந்த அபாயகரமான குடிநீரே இப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai