மாதவரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
By DIN | Published on : 24th November 2017 03:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வணிக வளாகம். (உள்படம்) வணிக வளாகத்தைப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.
சென்னை மாதவரம் அருகே ரூ.30 கோடி மதிப்பிலான கோயில் நிலம், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மாதவரத்தை அடுத்த வில்லிவாக்கம் சாலையில் பழைமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இந்த கோயிலுக்குச் சொந்தமான 12 கிரவுண்ட் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் , கிடங்கு, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர்.
இதுகுறித்து, அறநிலையத்துறைக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மூலம் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
ஆனால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த குடியிருப்பு வாசிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அரசின் சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் உத்தரவின்படி அறநிலைத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் அரசு அதிகாரிகள், கோயில் நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருந்தகம், அடுக்கு மாடி குடியிருப்புகள், கிடங்கு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல் உதவி ஆணையர் காமில்பாஷா தலைமையில் ஆய்வாளர்கள் மாரியப்பன், சையத் ஜமால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடியிருப்புகள், வணிக வளாகம், கிடங்கு உள்ளிட்டவை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடியாகும். இங்கு தனியார் சிலர் அடுக்கு மாடி குடியிருப்புகளையும், கிடங்கு மற்றும் வணிக வளாகமும் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இந்த வாடகையை அவர்கள் கோயிலுக்குச் செலுத்தியிருக்கலாம். ஆனால், அதுவும் செலுத்தாமல் பல ஆண்டுகளாக வாடகை வசூலித்து வருகின்றனர். இதனால், வாடகைக்கு இருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகப் பதிவு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.