சுடச்சுட

  

  ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

  By DIN  |   Published on : 25th November 2017 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  strike

  திருவள்ளூர் அருகே குடிநீர் ஆழ்துளைக் கிணற்றுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  திருவள்ளூர் நகராட்சி யில் உள்ள எடப்பாளையம் பகுதியில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் தேக்கி வைத்து, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
  இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தனியார் இடத்தில் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாகவும் கூறி திடீரென குடிநீர் விநியோகம் செய்வதற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள், திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி, காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
  அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், இப்பகுதியில் பொது இடத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒருவர் தனக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏன் மேல் முறையீடு செய்யவில்லை எனக் கேட்டனர். மேலும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் சுத்தமானது. அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
  இதற்கு அதிகாரிகள் மேல்நிலைத் தொட்டியில் தேவையான அளவு குடிநீர் உள்ளதாகவும், உடனே மின் இணைப்பு கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட ஆழ்துளைக் கிணற்றிலிந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
  சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை-திருத்தணி-திருப்பதி அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai