Enable Javscript for better performance
குறைதீர் கூட்டம்: வெளிநடப்பு செய்த கரும்பு விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    குறைதீர் கூட்டம்: வெளிநடப்பு செய்த கரும்பு விவசாயிகள்

    By DIN  |   Published on : 25th November 2017 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    meet

    திருத்தணி சர்க்கரை ஆலை நிர்வாகம் 3 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் இருந்து கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமைவகித்தார்.
    கூட்டத்தில்,விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து வெளிநடப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து,சமரசம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து,கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். 
    அப்போது, பள்ளிப்பட்டு விவசாயி பெருமாள் கூறுகையில்,திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வட்டாரத்தில் ஒவ்வொரு விவசாயியும் குறைந்தது 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் பதிவு செய்து கரும்புகளை பயிரிட்டுள்ளனர். ஆனால், உடனே வெட்டப்படும் கரும்புக்கு ஆலை நிர்வாகம் பணம் வழங்குவதில்லை. இதேபோல், கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 20 கோடி வரை நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் போதும், கரும்பை அங்கு அளித்தாலும் குறிப்பிட்ட நாள்களுக்குள் பணம் தராமல் காலதாமதம் செய்து விவசாயிகளை காத்திருக்க வைக்கின்றனர் என்றார். 
    திருவாலங்காடு விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து விவசாயிகளுக்கு கரும்பு வெட்டக் கூலி, வாகன வாடகை, ஏற்று, இறக்கு கூலி உள்ளிட்டவற்றை முதலிலேயே வழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து, கரும்பை அறுவடை செய்து, கொள்முதல் செய்கின்றனர். அதேபோல், வாகனத்தில் இருந்தபடியே எடைபோட்டு அதற்கான தொகையை உடனே அளிக்கின்றனர். அதனால் இங்கிருந்து வெளிமாநிலத்துக்கு கரும்புகளை அனுப்ப தடை செய்யக் கூடாது என்றார்.
    இதேபோல் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாரப் பகுதிகளில் மழையால் நெற்பயிர் மூழ்கியது. இதற்கான கணக்கெடுப்பு இதுவரையில் நடத்தவில்லை. அதேபோல் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை என்றனர். 
    இதற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி பதில் அளித்துப் பேசியதாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகள் பாதிக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அதேபோல், கரும்பு விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கலாம் என்பது குறித்து சர்க்கரை ஆணைய இயக்குநரிடம் பேசி முடிவு செய்யப்படும். 
    மேலும், மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai