சுடச்சுட

  

  சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்படும் செப்பாக்கம் கிராமம்: கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்

  By DIN  |   Published on : 28th November 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanimozhi

  செப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.

  செப்பாக்கம் கிராமத்தில் சாம்பல் கழிவுகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களை மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, திங்கள்கிழமை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 
  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளிட்டவை அமைந்துள்ளன. 
  இந்த அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் இப்பகுதியில் நீர் மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளதாக அப்
  பகுதியில் வசிக்கும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர். 
  கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார்.
  இந்நிலையில், செப்பாக்கம் பகுதிக்கு திடீரென வருகை புரிந்த கனிமொழி எம்.பி., அப்பகுதியில் உள்ள சாம்பல் குளம், கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய்களில் கொட்டப்பட்டுள்ள சாம்பல் கழிவுகளைப் பார்வையிட்டார். அப்போது, அங்கு வசிக்கும் பெண்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 
  பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: எண்ணூர் துறைமுக விரிவாக்கம், வடசென்னை அனல் மின் நிலையை சாம்பல் கழிவுகள் காரணமாக இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் ஏற்கெனவே இடம் பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது இங்கு வசித்து வருபவர்கள் மாற்று இடம் செல்ல வழியின்றி அவதிப்படுகின்றனர். 
  இவர்கள், சாலை, போக்குவரத்து, பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்கின்றனர். இங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் வடிகால் தண்ணீர் செல்லவில்லை என்றால், வெள்ளத்தில் சென்னை மூழ்கும். ஏற்கெனவே இப்பகுதி மக்களின் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் பேசியுள்ளேன். ஆனால் அதற்கு அமைச்சரிடம் இருந்து முழுமையான பதில் வரவில்லை. வருகிற கூட்டத்தொடரில் இது குறித்து கேள்வி எழுப்பி, முழுமையாக விளக்கம் பெறவுள்ளேன் என்றார்.
  மேலும் ஒரு புகார்: இப்பகுதியில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளதன் காரணமாக கடல் பகுதியில் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் (கொதிக்கும் நீர்) ராட்சத குழாய்கள் மூலம் 8 கி.மீ. தொலைவிலுள்ள ஊரணம்பேடு கிராமத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 
  அங்கு (சாம்பல் குளத்தில்) மொத்தமாக குவித்து வைக்கப்படும் சாம்பல் கழிவுகள், சுடு நீர் ஆவியானவுடன் திடச் சாம்பல் கழிவுகள் மட்டும் லாரி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றுத் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுகிறது. சாம்பல் கழிவுகள் ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் வழியில் செப்பாக்கம், கே.ஆர். பாளையம், மவுத்தம்பேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. 
  இவ்வழியே செல்லும் ராட்சத குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு, அதிக வெப்பமான சாம்பல் கழிவுகள் கசிவதால் இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால், இந்த கிராமங்களில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொசஸ்தலை ஆற்றின் நீரும் செப்பாக்கம் கிராமம் அருகே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. 
  இதனால், இப்பகுதியிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அங்குள்ள நீர் நிலைகள் அனைத்திலும் கலப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொசஸ்தலை ஆறு ஆக்கிரமிப்பால் வடசென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai