மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: 3 பேர் சாவு
By DIN | Published on : 28th November 2017 03:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கார் விபத்தில் இறந்த நவீன், புருஷோத்தமன்.
திருவாலங்காடு அருகே மதுபோதையில் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாலங்காட்டை அடுத்த குப்பம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சந்தானத்தின் மகன் நவீன்(20) டிப்ளமோ படித்தவர். அவருக்குச் சொந்தமான காரில், அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி(24), புருஷோத்தமன்(24),சிவகுமார்(28), பார்த்திபன்(28), ரவிகுமார்,(23) நடராஜ்(21) உள்பட 7 பேர் திங்கள்கிழமை மதியம் கனகம்மாசத்திரத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், மாலை 5 மணி அளவில் அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை நவீன் ஓட்டிவந்தார். கார் அத்திப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் திடீரென தலைகீழாக கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இதில் நவீன்,கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தனர். புருஷோத்தமன் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற நான்கு நண்பர்களும் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவீனும், நண்பர்களும் மது குடித்துவிட்டு காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குப்பம் கண்டிகை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.