Enable Javscript for better performance
ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    
    arest

    கஞ்சாவுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி. (வலது) கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸார்.

    ஆந்திரத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை தமிழக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு லாரியில் சென்னை வழியாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
    அதையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. புருஷோத்தமன் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டை புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது அவ்வழியாக வந்த லாரியில் ரப்பர் ஷீட்டுகளுக்கு இடையே ரூ.30 லட்சம் மதிப்பில் 270 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரியில் சென்ற சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த செல்வம் (28), மதி (40), ரமேஷ் (25) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர வனப்பகுதியில் விளைவிக்கப்பட்ட கஞ்சாவை, கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும், அதில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான ரப்பர் ஷீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    இரு மாதத்தில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: தமிழக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த இரு மாதங்களாக நடத்திவரும் தொடர் சோதனையில் இதுவரை 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai