சுடச்சுட

  

  செப்புத் தகட்டில் இருந்து இரிடியம் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். 
  திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூர் கிராமம் பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(43) இவரது வீட்டில் மிகவும் பழைமையான செப்புத் தகடுகள், பாத்திரங்கள் இருந்தன. இதனை இவரது முன்னோர்கள் பாதுகாத்து வந்தனர். இதனில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கலாம் என்று இவரின் நண்பர்கள் கூறியதையடுத்து, பரிசோதித்து பார்க்க முடிவு செய்தார்.
  அப்போது, பாலசுப்ரமணியத்திடம் அவரின் நண்பர் கோபால், தனக்கு வடநாட்டைச் சேர்ந்த ராம்ராஜ் பாண்டே (33) என்ற விஞ்ஞானியைத் தெரியும் என்றும், அவரிடம் செப்புத் தகட்டை கொடுத்து பரிசோதித்து விவரம் தெரிந்துகொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறினார். 
  இதைத்தொடர்ந்து இருவரும், அம்பத்தூர் ஒரகடத்தைச் சேர்ந்த ராம்ராஜ் பாண்டேவை தொடர்புகொண்டனர். இவர்கள் 3 பேரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்கள். 
  அப்போது, ராம்ராஜ் பாண்டே செப்புத் தகட்டில் இரிடியம் உள்ளதா என பரிசோதிக்க ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என்றும், இரிடியம் இருப்பது கண்டறியப்பட்டால் பலகோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய பாலசுப்ரமணியம் ஊருக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொண்டுவந்து ராம்ராஜ் பாண்டேயிடம் கொடுத்தார். 
  இதையடுத்து, இரிடியம் பரிசோதனைக்கு ரசாயனம் வாங்கி வருவதாகச் சென்ற ராம்ராஜ்பாண்டே மாயமானார். அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலசுப்ரமணியம், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் வள்ளியின் விசாரணையில் ராம்ராஜ் பாண்டே மிகப்பெரிய மோசடி மன்னன் என்பது தெரியவந்தது.
  ராம்ராஜ் பாண்டே ஏற்கெனவே நவ.3-ம் தேதி தனது வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகளை போல் வந்த கும்பல் தன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம்,15 சவரன் தங்கநகையை அள்ளிச் சென்றனர் என்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், விசாரணையில் அது பொய்ப் புகார் என்று தெரியவந்தது. அப்போது போலீஸார் ராம்ராஜ் பாண்டேயை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 
  தற்போது, பாலசுப்ரமணியம் கூறிய அடையாளமும், பொய்ப் புகார் கொடுத்த ராம்ராஜ் பாண்டேயின் அடையாளமும் ஒத்துப்போனதால் போலீஸார் ராம்ராஜ் பாண்டேவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai