Enable Javscript for better performance
திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : வெங்கத்தூரில் கடையடைப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : வெங்கத்தூரில் கடையடைப்பு போராட்டம்

    By DIN  |   Published on : 30th November 2017 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkatur

    வெங்கத்தூரில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

    திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    திருவள்ளூர் நகராட்சியை தரம் உயர்த்த அருகில் உள்ள காக்களூர், வெங்கத்தூர், திருப்பாச்சூர், சின்ன ஈக்காடு ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
    இந்நகராட்சி மேம்படுத்தப்பட்டால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் இயங்குவதற்கான நவீன பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களும் மேம்படுத்தப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். அதோடு நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். 
    இந்நிலையில், நகராட்சியில் உள்ள வார்டுகளை மறுசீரமைப்பு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அருகில் உள்ள ஊராட்சிகளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 
    இதற்கு வெங்கத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலயோகி கூறியதாவது: வெங்கத்தூர் தற்போதைய நிலையில் முதல் நிலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. 
    இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை எளிய மக்களாவர். 
    இது, கிராம ஊராட்சியாக இருப்பதால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடுகள் திட்டம் , காலனி குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
    நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இத்திட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிடும். அதனால் எக்காரணம் கொண்டும் வெங்கத்தூரை நகராட்சியோடு இணைக்கக் கூடாது. அதை மீறி இணைத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai